Tuesday, April 23, 2024

சிம்மாசனத்தில் அமர்ந்தும் பிச்சைக்காரனாய்

  மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Saturday, April 20, 2024

அரசியல்..கர்மா..

 😀


*அண்ணாமலை* என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது *கர்மா*


கர்மா பொல்லாதது.. 

அதை வெல்ல யாராலும் முடியாதது.. 

இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..


மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சி பெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.


காமராஜர் பதவி இழந்து, அண்ணாதுரை மறைந்த பின் நமக்கு எதிரி யாருமே இல்லை என்று இறுமாந்து இருந்த கருணாநிதிக்கு எம் ஜி ஆரை முன்னிறுத்தியது கர்மா.. அவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சி கட்டிலுக்கு வர முடியவில்லை இதுதான் கர்மா 


எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய் விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார் இதுதான் கர்மா .


ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள் இதுதான் கர்மா   ...


எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...


ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...


ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார் இதுதான் கர்மா  ...


ஜெயலலிதா சிறைக்கு போக வேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...


ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறை சென்ற போது  அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.


மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...


மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமர் ஆக்கிய சோனியா, இந்தியாவே என் குடும்பத்திற்கு சொந்தம் என் மகனை எப்போது வேண்டுமானாலும் பிரதமர் ஆக்கி கொள்வேன் என்று இறுமாப்பில் இருந்த சோனியாவுக்கு மோடி வடிவில் ஆப்பு வைத்தார் கடவுள் இதுதான் கர்மா  


ஜெயலலிதா அம்மையார் மறைந்து சசிகலா முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்து, எடப்பாடியார் முதல்வர் ஆனார் இது விதி என்றால்... எடப்பாடியார், சசிகலா தினகரன் என பிரிந்து, தேர்தலில் படு தோல்வி அடைந்து ஸ்டாலின் முதல்வர் ஆகி, இனி எதிரிகள் யாரும் இல்லை நிம்மதியாக ஆட்சி செய்யாலாம் என்று ஸ்டாலின் நினைக்க, அண்ணாமலை என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது கர்மா .. இது தான் கர்மா 


விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....


கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை... 


உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 

தவறுவதும் இல்லை....


உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.


யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .


கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 

நன்மையை மட்டுமே விதைப்போம்.


நல்லவர்களாக வாழ்வோம்.

கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....


*பாவமன்னிப்பு*  என்ற மதச்சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?


பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.


உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?..  உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்..... 


வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம்  நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.


தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் செய்யும்.


இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட  தர்மத்தின் வாழ்த்து மிகவும் சிறப்பானது. தர்மம்-தலைகாக்கும்  தக்கசமயத்தில் துணை நிற்கும்.  கூட இருந்தே குழி பறித்தாலும் செய்த தர்மம் தலைகாக்கும்.      

 

தர்மமானது  நம் வம்ச வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும்.    

                                                                            பார்ப்போம்...(வாட்ஸ் அப் பகிர்வு )

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, April 7, 2024

பயனுள்ள தை பகிரலாமே..

 தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி


வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:


இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வசதிகள்:


சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.


நேரம்:


இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.


கூடுதல் விவரங்களுக்கு:


தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு:


http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் பெறலாம். For புக்கிங் 


https://www.tnwwhcl.in/hostel-details

Friday, March 29, 2024

படித்ததில் பிடித்தது

 ●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.


○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.


●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...


○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...


●X:  சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.


○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.


●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?


 Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..


6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.


5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.


4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.


3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.


2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.


1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.


அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.


வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.


பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.


●X: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?


○Y : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!

ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!

மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!


அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா! 


●X : சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்! 


○Y : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...


●X : என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...

உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா! 


நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க

மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!


○Y : என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...

Thursday, March 28, 2024

அமெரிக்கா..ஒரு புலிவால்..

 படித்தேன்- உண்மை- யதார்த்தம்-  பகிர்கிறேன்*


*Ground Reality from a US Citizen:

“ சித்ரா ராகவன்.

உ.எண்.1854.


*இதோ ஒரு புதிய பார்வை - தங்கள் கவனத்திற்கு...


*America ஒரு புலிவால்


நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று.....


*ஆனால் Ground reality வேறு. 


நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. 

நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன். 


அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? 

Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .

*நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். 


*வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். *வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mop போடுவாள். 


வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். *அமெரிக்கா சொல்லி தரும். 


Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும்.


உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு.


*இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.

படிப்பு மிகவும் கடினம். 

நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். *Tension.


படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள்

வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். *Tension.


வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.

இல்லாவிட்டால் திரும்பி போக

வேண்டும். *Tension. 


இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும்.


இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.


*இங்கே location, career முக்யம்.

North carolina, south carolina - 

Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம்.


வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  

Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை.


*ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.


Minasotta, Detroit, Chicago - snow area- 

Social drinking- NO


பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். *அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.


இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். 

வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.

அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.


*அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும்.😁


*இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.😁😁


பிறகு 2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். 

*இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 


பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 


*வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும்.


*Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 


Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.


Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். 

சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 


Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். *அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.


நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது.


சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.


Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். 

இப்போது இந்தியாவிலும் இப்படித்தான்.


Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 


Coronaவா? 

ஊருக்கு போக முடியாது. 

Stamping வாங்கலையா..... இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. 

Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். 

நடுவில் அப்பா போனாலோ, அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. 

*ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 


பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. 

Society pressure.


சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.


இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன், கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 

எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள்.


இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். 


அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.


Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது.


அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.


இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். 

இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.


மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான்.* 

*விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.


அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா???


மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள்.


*இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம்.


*சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 


எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.


*வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்

Monday, March 18, 2024

தேர்தல்...

 எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்

கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(ஐம்பதாண்டுகளுக்கு‌ முன்னால் சிகரம் முற்போக்கு மாத இதழில் நான் எழுதியது.திருத்தம் ஏதும்‌ செய்ய வேண்டி‌இல்லாது  சூழல் அப்படியே இருப்பது ஆச்சரியமே.  )

Sunday, March 17, 2024

யாதோ...

 கவிஞனாக அறிமுகமாயிருந்த 

என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக் சுருங்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்